சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: தமிழகத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பனமரத்துப்பட்டி:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கட்சி கொடியேற்று விழா
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். முன்னதாக நிலவாரப்பட்டி பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ராஜமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வக்கீல் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். தொடர்ந்து பனமரத்துப்பட்டியில் அவர் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
சொத்து வரி உயர்வு
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் தி.மு.க. ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாத ஒரே ஆட்சியாக தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர். உடற்பயிற்சி செய்வது, டீக்கடையில் டீ குடிப்பது என விளம்பரம் செய்து வருகிறார்.
தி.மு.க. கட்சியும், ஆட்சியும் ஒரிஜினல் இல்லை. மக்கள் மீது சுமைகள் இருக்கக்கூடாது என்பதற்காக சொத்துவரியை அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தவில்லை. தற்போது இந்த ஆட்சியாளர்கள் வந்தவுடனே சொத்து வரியை உயர்த்தி விட்டார்கள்.
தினமும் கொலை, கொள்ளை திருட்டு நடைபெற்று வருவதால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதை பொருட்கள் அதிகம் விற்பனை செய்யும் மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை அழித்து வருகிறார்கள்.
பாதுகாப்பு இல்லை
சட்டம், ஒழுங்கும் முழுமையாக சீரழிந்துவிட்டது. போலீசார் தாக்கப்படுகிறார்கள். தற்போது போலீசாரே தனியாக செல்லமுடியாத சூழல் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? அப்போது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விடும்.
மின்சாரம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரம். தற்போது தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் நிறுத்தப்படும்? என்று தெரியாத நிலை உள்ளது. மின்சார கட்டணம் உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர உள்ளது. மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என 3 முதல்வர்கள் உள்ளனர். தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதனை நம்பி மக்கள் ஓட்டளித்தனர். தற்போது அதுவும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
மடிக்கணினி
அ.தி.மு.க. ஆட்சியில் காலத்திற்கேற்ற கல்வி கொடுத்து, அதற்காக மடிக்கணினியை கொடுத்தோம். அந்த அற்புதமான திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவரும், டாக்டர் ஆகலாம் என்பதையும், அ.தி.மு.க. ஆட்சியில்தான் செயல்படுத்தி காட்டினோம்.
அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டர்கள் கூட முதல்-அமைச்சராக வர முடியும். அ.தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கும், விசுவாசத்திற்கும் உயர்ந்த பதவி கிடைக்கும். அதற்கு நானே உதாரணம்.
தமிழக முதல்-அமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை தந்தேன். ஆனால் தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்து மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சாமி தரிசனம்
தொடர்ந்து ஜல்லூத்துப்பட்டியில் ராஜகாளியம்மன், செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற மண்டல பூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்மணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வையாபுரி, வெங்கடேசன், மெடிக்கல் ராஜா, பேரூர் செயலாளர் சின்னத்தம்பி, கூட்டுறவு சங்க தலைவர் ஜல்லூத்துப்பட்டி மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.