சட்ட உதவிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பொதுமக்கள் அணுகலாம் கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி பேச்சு


சட்ட உதவிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பொதுமக்கள் அணுகலாம்  கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி பேச்சு
x

சட்ட உதவிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பொதுமக்கள் அனுகலாம் என்று கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி பேசினார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்ட விழிப்புணர்வு ஆலோசனைக்குழு சார்பில் மாவட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நீதிபதி கீதாராணி பேசியதாவது:-

சட்ட உதவி முகாமானது நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கவும், பொதுமக்களுக்கிடையேயான பிரச்சினைகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டுகிறது. மேலும், ஏழைகளா இருந்தாலும் அவர்தம் குறைகளுக்கு நிவாரணம் காண நீதி மன்றங்களுக்கு செல்ல அவர்களுக்கு உதவி புரியவே தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள்

ஆணைக்குழு, மாவட்ட மற்றும் வட்டக்குழுக்கள் துணையுடன் செயல்பட்டு வருகிறது.

சட்ட உதவி

பொதுமக்கள் மற்றும் வழக்காளிகள், மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரசம் மற்றும் சுமூக முறையில் விரைவில் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் வழக்குகளை சுமூக முறையில் தீர்த்துக்கொள்ளலாம்.

எவ்வித சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விழுப்புரம் 04146-228000, வட்ட சட்டப்பணிகள் குழுக்களான கள்ளக்குறிச்சி 04151-226730, உளுந்தூர்பேட்டை 04149-220433, திருக்கோவிலூர் 04153-253970, சங்கராபுரம் 04151-235033 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அனைத்து துறைகளின் வாயிலாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி, கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் பேட்டரி வீல் சேர், வருவாய்த்துறையின் சார்பில் 34 பேருக்கு பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணை, 31 பேருக்கு பழங்குடியினர் சாதிசான்றிதழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 40 பேருக்கு பட்டா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

பின்னர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், சட்ட ஆலோசனைகள் பெறுவது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

கூட்டத்தில் முதன்மை சார்பு நீதிபதி வீரணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் சரவணன், கள்ளக்குறிச்சி துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதன்மை சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story