தரமணியில் உள்ள விடுதி அறையில் சட்டக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தரமணியில் உள்ள விடுதி அறையில் சட்டக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முபாரக். தையல்காரரான இவர், தற்போது தனது குடும்பத்துடன் ஆவடி கன்னிகாபுரம், காந்தி தெருவில் வசித்து வருகிறார். இவருடைய மகன் ேஷக் ரகுமான் (வயது 20). இவர், தரமணி பட்டுக்கோட்டை அழகிரி தெருவில் உள்ள ஒரு விடுதியில் நண்பர்களுடன் தங்கி, தரமணியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு சட்டம் படித்து வந்தார்.
இந்த நிலையில் தான் தங்கி இருந்த விடுதியின் அறையில் ஷேக் ரகுமான் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி விடுதி உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் தரமணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய ஷேக் ரகுமான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவன் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது, ஷேக் ரகுமான் எழுதிய ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், "மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக" எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.