நாமக்கல் மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட்டு புறக்கணிப்பு
கடந்த மாதம் தூத்துக்குடியில் வக்கீல் முத்துக்குமார் பட்டப்பகலில் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். இதேபோல் கடந்த 26-ந் தேதி சென்னை சைதாப்பேட்டை வக்கீல் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் சமூக விரோதிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வக்கீல் துரைசாமி வீட்டில் இரவில் அத்துமீறி நுழைந்து 3 டிராக்டர்களையும், பொருட்களையும் சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்தி துரைசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
1,200 வக்கீல்கள்
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், பரமத்தி, ராசிபுரம், திருச்செங்கோடு என மாவட்டம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.