பெருங்குடியில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை


பெருங்குடியில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 26 March 2023 11:15 PM GMT (Updated: 26 March 2023 11:16 PM GMT)

பெருங்குடியில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு

வக்கீல்

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 33). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும். இவர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

ஜெய்கணேசுக்கு திருணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜெய்கணேஷ், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு, அதே பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார்.

வெட்டிக்கொலை

அதன்பிறகு இரவு வீடு திரும்பினார். ராஜீவ் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டின் அருகே சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வக்கீல் ஜெய்கணேசை சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெய்கணேஷ், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெய்கணேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இதையறிந்த ஜெய்கணேசின் உறவினர்கள் மற்றும் சக வக்கீல்கள், நண்பர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். ஜெய்கணேசை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜீவானந்தம், துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் ஆகியோர் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள். 2 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து ஜெய்கணேசை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது.

ரவுடி கும்பல் கைவரிசை

ஜெய்கணேஷ், கிரிக்கெட் விளையாடிவிட்டு வீடு திரும்பியபோது அவரை ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் பின்தொடர்ந்து சென்று திட்டம் போட்டு கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஜெய்கணேஷ் வீட்டுக்கு வந்த வழியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

வக்கீல் ஜெய்கணேஷ் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. ரவுடிக்கும்பலை சேர்ந்த சிலரே இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது ரவுடி கும்பலுக்காக கோர்ட்டில் வாதாடியதால் எதிர்தரப்பை சேர்ந்த ரவுடி கும்பல் அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரவுடி கும்பலால் வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story