நெல்லையில் வக்கீல்கள் சாலை மறியல்
ஆலங்குளம் வக்கீல் கொலையை கண்டித்து நெல்லையில் வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் வக்கீல் அசோக்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நெல்லை கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகம் முன்பு உள்ள நெல்லை-தூத்துக்குடி மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வக்கீல்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு சாலையோரத்தில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர் சீதா, செயற்குழு உறுப்பினர்கள் அஜித், இசக்கி, மகாராஜன், பிரேம், மூத்த வக்கீல்கள் ரமேஷ், மணிகண்டன், சுதர்சன், அருண் பிரவீன், பிரசன்னா, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வக்கீல்கள் கூறுகையில், "வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதை கண்டுகொள்ளவில்லை. எனவே வக்கீல்களை பாதுகாக்கும் வகையில் உரிய பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.
ஆலங்குளத்தில் வக்கீல் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பிரச்சினை தொடர்பாக ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றனர்.