2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
மயிலாடுதுறையில் 2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணித்தனர்.
வழக்கு விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், புதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி நேற்றுமுன்தினம் முதல் 5 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வக்கீல் சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் மாயூரம் வக்கீல் சங்கத் தலைவர் ஜெகதராஜ், மயிலாடுதுறை வக்கீல் சங்கத் தலைவர் வேலு.குபேந்திரன் ஆகியோர் தலைமையில் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். 2- வது நாளான நேற்றும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 400-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணிக்கு செல்லாததால், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட 8 நீதிமன்றங்களும் செயல்படவில்லை. இதனால் 2-வதுநாளாக வழக்கமான நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.