ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வந்தால் நன்மை தருமா?; வக்கீல்கள் கருத்து
ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வரும் பட்சத்தில் அது நீதிபதி, வக்கீல், பொதுமக்களுக்கு நன்மை தருமா?, பாதிப்பு வருமா? என்பது குறித்து கேட்டபோது வக்கீல்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வரும் பட்சத்தில் அது நீதிபதி, வக்கீல், பொதுமக்களுக்கு நன்மை தருமா?, பாதிப்பு வருமா? என்பது குறித்து கேட்டபோது வக்கீல்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
சாமானியனுக்கு தெரியாது
ஆங்கில வார்த்தைகள் இப்போது தமிழ்மொழியுடன் கலந்து அதிகம் உச்சரிக்கப்பட்டாலும், பல கடினமான ஆங்கில சொற்களுக்கு இன்றும் விளக்கம் தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அதுவும் சட்டம் தொடர்பான ஆங்கில சொற்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. நீதி கேட்டு ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சாமானிய மனிதன் சென்றால், அங்கு நடைபெறும் வழக்கு விசாரணை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.
தன் வக்கீலும், எதிர்தரப்பு வக்கீலும், நீதிபதியின் முன்பு செய்யும் ஆங்கில வாதத்தை புரிந்துகொள்ள முடியாது. அன்னிய மொழியில் நடைபெறும் இந்த வாதத்தில், தான் கொடுத்த விவரங்களை எல்லாம் நீதிபதியிடம் தன் வக்கீல் எடுத்துக்கூறினாரா? என்றும் தெரியாது.
ஜனாதிபதி அதிகாரம்
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348-வது பிரிவு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் ஆங்கிலம் மட்டும்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேநேரம் 348 (2) பிரிவு ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக அந்தந்த மாநில மொழியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்கிறது. இந்த அதிகாரத்தின்படிதான் அலகாபாத், பாட்னா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது.
எனவே சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக ஜனாதிபதி அறிவித்தால், என்னென்ன விளைவுகள் ஏற்படும்? இதுகுறித்து திண்டுக்கல் வக்கீல்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
மக்களின் உரிமை
மூத்த வக்கீல் காமாட்சி:- தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த போது அதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இதுவரை தமிழ் வழக்காடு மொழியாக கொண்டு வரப்படவில்லை. கீழமை நீதிமன்றங்கள் முதல் ஐகோர்ட்டு வரை தமிழில் வழக்காடினால், வழக்கு தொடர்பான விவாதத்தை மனுதாரர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். தனது வழக்குக்கு வக்கீல் எவ்வாறு வாதாடுகிறார்? என்பதை பாமர மக்களும் அறிந்து கொள்வார்கள். இவ்வாறு தெரிந்து கொள்வதை மக்களின் உரிமை என சட்டம் சொல்கிறது. ஆனால் அதுபோன்ற நிலை இல்லை. எனவே தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும்.
மூத்த வக்கீல் ஜெயபாலன்:- தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக நடைபெறும் விவாதத்தை மக்கள் எளிதில் தெரிந்து கொள்வார்கள். வக்கீல்களின் வாதம், நீதிபதியின் விசாரணை ஆகியவற்றை சாதாரண மக்களும் அறிந்து கொள்ளலாம். அதற்கேற்ப தனது தரப்பு நியாயத்தை தாய் மொழியில் விளக்க முடியும். அதேபோல் வக்கீல் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களே வாதாடி கொள்ளும் நிலை ஏற்படும். நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் தமிழிலேயே வந்து விடும் என்பதால் பிறரின் துணையின்றி பாமர மக்களும் நீதிமன்ற நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
சிக்கல் இருக்காது
திண்டுக்கல் வக்கீல் சங்க தலைவர் மூர்த்தி:- தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம். ஐகோர்ட்டில் ஒருசில நீதிபதிகளை தவிர பெரும்பான்மையான நீதிபதிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வந்தால் எந்தவித சிக்கலும் இருக்காது. அதேநேரம் வழக்கின் விசாரணை போக்கை சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள். ஒரு வழக்கின் விசாரணை பற்றி சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் தெரிய வேண்டும். அது அவர்களின் உரிமை. இதற்கு தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.