வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
கும்பகோணம், ஜூன்.21-
கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையம் மற்றும் சுவாமிமலை போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து போலீசார் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறி கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று காலை வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து கோர்ட் வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை பகுதியில் வக்கீல்கள் சங்க உறுப்பினரும் வக்கீலுமான சுந்தர் மீது சிலர் தாக்குதல் நடத்தி அவரை வெட்ட முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.இதை கண்டித்து கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஏராளமான வக்கீல்கள் நேற்று காலை கோர்ட்டை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்க தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான வக்கீல்கள் கோர்ட்டு முன்பு திரண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்றும் (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பு செய்வதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.