முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரிகள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரி கள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கவில்லை.
இதனால், கள்ளக்குறிச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது, வழக்காடிகள் மற்றும் வக்கீல்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விரைந்து அமைக்க வலியுறுத்தி கடந்த 23-ந்தேதி முதல் கள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உண்ணாவிரதம்
இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன், பொருளாளர் தியாகராஜன், மூத்த வக்கீல் செல்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டமானது, காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இதில் வக்கீல்கள் பழனிவேல், ராம்குமார், செந்தில்குமார், ராஜேஷ்வரன், ஜனார்த்தனன், சுபச்சந்திரன், தாமரைச்செல்வன், சின்னதுரை மற்றும் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.