வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
3 சட்ட திருத்தங்களை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3 சட்டங்களை மத்திய அரசு திருத்துவதை கண்டித்து வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு வேலூர் மண்டல தலைவர் சிவ்ராஜ் தலைமை தாங்கினார். வேலூர் பார் அசோசியேசன் தலைவர் பி.அண்ணாமலை, அட்வகேட் அசோசியேசன் செயலாளர் வி.பி.பாஸ்கரன், மகளிர் வழக்கறிஞர் சங்க தலைவி சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் டி.உலகநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டங்களை திருத்தி நடைமுறைப்படுத்துவதை கண்டித்தும், அவற்றுக்கு இந்தியில் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டங்களை பழையபடியே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் வேலூர் பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன், மகளிர் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பார் அசோசியேசன் நிர்வாகி விஜயகுமார் நன்றி கூறினார்.