பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்களும், அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்களும் மற்றும் பிற வக்கீல்களும் நேற்று காலை பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல்கள், தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் திருவள்ளுவர், காந்தி உருவப்படங்களை மட்டும் வைக்க வேண்டும், மற்ற படங்களை வைக்கக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் உருவப்படத்தை நீதிமன்றத்தில் இருந்து எடுக்கக்கூடாது, அதனையும் வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது வக்கீல்கள் சிலர் கூறுகையில், அம்பேத்கரின் படத்தை அனைத்து நீதிமன்றங்களிலும் வைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை திரும்பப்பெறா விட்டால் நீதிமன்றத்தின் உத்தரவு நகலுடன், எங்களது கருப்பு அங்கியையும் சேர்த்து எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை, வன்முறைகளை கண்டித்தும், டாக்டர் அம்பேத்கரின் படத்தை நீதிமன்றத்தில் இருந்து அகற்ற கோரும் சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் நேற்று பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்களும், அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்களும் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.


Next Story