துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கும்பகோணத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுைகயிட்டு வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கும்பகோணத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுைகயிட்டு வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட்டு புறக்கணிப்பு
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை போலீஸ் சரகத்தில் வக்கீல் சுந்தரை தாக்க முயன்ற சிலரை கைது செய்யக்கோரி அவர் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைப்போல கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் ராஜசேகர் தனக்கு ஒரு வக்கீல் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
முற்றுகை
இந்தநிலையில் நேற்று காலை மேற்கண்ட 2 புகார்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறி இதை கண்டித்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வக்கீல்கள் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் பேச்சுவார்த்தை நடத்தினாா். அப்போது அவர் 2 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து வக்கீல் சங்க நிர்வாகிகள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
உண்ணாவிரதம்
இதுகுறித்து வக்கீல் சங்க தலைவர் ராஜசேகர் கூறுகையில், போலீஸ் உயர் அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று தற்போது போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் நாளை காலை முதல் கும்பகோணம் கோர்ட்டு முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.