வக்கீல்கள் திடீர் போராட்டம்
நெல்லையில் வக்கீல்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதில் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வாலிபர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் அவர் நெல்லை கோர்ட்டில் நேற்று மதியம் சரண் அடைய இருப்பதாக தகவல் வெளியானது. இதையொட்டி நெல்லை மாநகர போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கோர்ட்டுக்குள் செல்லும் நுழைவு வாசல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு வந்த வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள்.
அப்போது வக்கீல்கள் செல்லும் நுழைவு வாசல் பகுதியிலும் போலீசார் கடுமையாக சோதனை நடத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரையும் ரோட்டில் நிறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையை நிறுத்தினார்கள்.