குலசேகரத்தில்போலீசாரை கண்டித்து வக்கீல்கள் திடீர் சாலை மறியல்


குலசேகரத்தில்போலீசாரை கண்டித்து வக்கீல்கள் திடீர் சாலை மறியல்
x

குலசேகரத்தில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரத்தில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வக்கீல் மீது தாக்குதல்

குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜன் (வயது 42). வக்கீலான இவருக்கு குலசேகரமங்கலம் பெரவூர் இடத்தில் ரப்பர் தோட்டம் உள்ளது.

இந்தநிலையில் ஜெஸ்டின் ராஜன் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், ரப்பர் தோட்டத்தை பார்க்க தனது காரில் சென்றேன். அப்போது சிலர் எனது தோட்டப் பகுதியை சேதப்படுத்தியும், 20 ரப்பர் மரங்களை சாய்த்தும் உள்ளனர். நேற்று காலையில் நான் மீண்டும் தோட்டத்திற்கு சென்ற போது அக்கம் விளையைச் சேர்ந்த பிரின்ஸ் எட்வின் (51) மற்றும் மங்கலத்து விளை பெரவூரைச் சேர்ந்த வினு (49) ஆகியோர் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என கூறியிருந்தார்.

இதையடுத்து புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் புகார் மனுக்கான ரசீது கொடுத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறியுள்ளார்.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி வரை புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் அலுவல் சார்ந்த பணிக்காக வெளியூர் சென்றார். இதற்கிடையே வக்கீல் ஜெஸ்டின் ராஜனுக்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் மற்றும் வக்கீல்கள் சுந்தர் சிங், ஜெஸ்டின், ஜெயக்குமார், ஜெபித்தாஸ், பினுருமாரி உள்ளிட்ட வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

பின்னர் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாத போலீசைக் கண்டித்தும், வக்கீலை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரியும் திடீரென போலீஸ் நிலையம் முன்பு மார்த்தாண்டம்-குலசேகரம் பிரதான சாலையில் மாலை 5.30 மணிக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

உடனே போலீசார் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்றனர். இதனால் மறியல் தொடர்ந்தது.

இந்த மறியலால் அரசு பஸ்கள், கல்லூரி வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் பயணிகள், மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். போராட்டம் நீடித்ததால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கு வந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நீடித்த போது பொதுமக்களுக்கும், வக்கீலுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது.


Next Story