கீழ்பவானி வாய்க்காலின் ெரயில்வே பாலத்தில் தேங்கி கிடக்கும் கழிவுகள்- கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கீழ்பவானி வாய்க்காலின் ெரயில்வே பாலத்தில் தேங்கி கிடக்கும் கழிவுகள்- கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் ரெயில்வே பாலத்தில் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இவற்றை கொட்டு்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் ரெயில்வே பாலத்தில் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இவற்றை கொட்டு்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுகள் தேக்கம்

பவானிசாகர் அணையில் இருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கவுந்தப்பாடி அருகே 2-ஆக பிரிகிறது. அதில் ஒரு வாய்க்கால் 74.2 - வது மைலில் உள்ள அறச்சலூர் வரை சென்று பின்னர் மீண்டும் அறச்சலூரில் 2-ஆக பிரிகிறது. அதில் ஒரு வாய்க்கால் சென்னசமுத்திரம் பகுதிக்கும் மற்றொரு வாய்க்கால் சென்னிமலை பகுதி வழியாக திருப்பூர் மாவட்டத்துக்குள் சென்று முத்தூர் அருகே மங்கலப்பட்டியை அடைகிறது.

நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக செல்லும் இந்த கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனம் பயன் பெற்று வருகிறது. சென்னிமலையை அடுத்த புங்கம்பாடி பகுதியில் உள்ள 63-வது மைலில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே ெரயில் பாதை செல்கிறது. அந்த இடத்தில் வாய்க்கால் தண்ணீர் குறுகலான ெரயில் பாலத்தின் அடியில் செல்லும் என்பதால் அங்கு எப்போதும் ஏராளமான பொருட்கள் தேங்கி கிடக்கும்.

வேதனை

தற்போது வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் அந்த பாலத்தில் ஏராளமான பழைய மெத்தைகள், தலையணைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த இடத்தில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து சென்னிமலை பகுதியில் உள்ள விவசாயிகள் கூறியதாவது:-

புங்கம்பாடியில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள ெரயில்வே பாலத்தின் அடியில் புகுந்து தண்ணீர் செல்வதால் இந்த வழியாக எந்த பொருள் மிதந்து வந்தாலும் இந்த பாலத்தில் சிக்கி விடும். வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாய்க்காலுக்குள் வீசுவது மிகப்பெரிய கொடூரமான செயல் ஆகும். நோய் தாக்குதலால் பலியான கால்நடைகளை விவசாயிகளே கீழ்பவானி வாய்க்காலுக்குள் கொண்டு வந்து போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. பல நேரங்களில் மனித உடல்கள் வாய்க்காலில் மிதந்து வந்து பாலத்தின் அடியில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

அகற்ற கோரிக்கை

வயல்களில் தண்ணீரை பாய்ச்சும் போது பல விவசாயிகள் இந்த தண்ணீரை குடிப்பதும் உண்டு. அதேபோல் கால்நடைகள் பெரும்பாலும் வாய்க்கால் தண்ணீரை குடிக்கும். கீழ்பவானி வாய்க்கால் புங்கம்பாடியை கடந்த பிறகும் தொடர்ந்து 63 மைல் தூரம் செல்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கீழ்பவானி வாய்க்காலுக்குள் பல நச்சு பொருட்களையும் சில விஷமிகள் போடுவதால் நாங்கள் துர்நாற்றத்துடன் இந்த தண்ணீரை பயன்படுத்துகிறோம். எனவே கீழ்பவானி வாய்க்காலுக்குள் அணை பகுதி முதல் கடைமடை வரை எந்த பொருளை வீசினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.


Next Story