கழிவுநீர் குழாயில் கசிவு; சீரமைக்கும் பணி மும்முரம்
பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதன் காரணமாக தெப்பக்குளம் வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதன் காரணமாக தெப்பக்குளம் வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
போக்குவரத்து மாற்றம்
பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி 5 கழிவுநீர் சேகரிப்பு மண்டலங்கள் பிரித்து, அந்தந்த பகுதியில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளிலும் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மரப்பேட்டை நீர்உந்து நிலையத்தில் இருந்து மாட்டு சந்தையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. தெப்பக்குளம் வீதி வழியாக செல்லும் இந்த குழாயில் கசிவு ஏற்பட்டு உள்ளது. அதை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
அப்போது அருகில் உள்ள குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் கசிவை சரி செய்யும் பணி பாதிக்கப்பட்டது. எனினும் குடிநீர் வினியோகத்தை நிறுத்தி உடைப்பு மற்றும் கசிவை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தெப்பக்குளம் வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
வாகன ஓட்டிகள் அவதி
இதன் காரணமாக கோட்டூர் ரோடு வழியாக வந்த வாகனங்கள் திருநீலகண்டர் வீதி, சத்திரம் வீதி வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் வால்பாறைக்கு சுற்றுலா சென்று விட்டு வந்த வெளியூர் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் அறிவிப்பு பலகையை வைக்காமல் தடுப்புகள் மட்டும் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.