லாரி டிப்பரில் மின்கம்பிகள் சிக்கியதால் சாலையில் சாய்ந்த கம்பம்
லாரி டிப்பரில் மின்கம்பிகள் சிக்கியதால் சாலையில் மின்கம்பம் சாய்ந்தது.
திருவெறும்பூர்:
திருச்சி அருகே உள்ள நவல்பட்டை சேர்ந்தவர் சரவணன்(வயது 37). லாரி டிரைவரான இவர், நேற்று துவாக்குடி அருகே சர்வீஸ் செய்யப்பட்ட டிப்பர் லாரியை தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் நோக்கி ஓட்டி வந்தார். துவாக்குடியை அடுத்த வாழவந்தான்கோட்டை பகுதியில் வந்தபோது திடீரென லாரியின் டிப்பர் மேலே தூக்கியது. இதனால் மேலே சென்ற மின்கம்பியில் டிப்பர் சிக்கியதில் எதிரே இருந்த மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் மின்வயர்கள் சாலையில் கிடந்தன. அப்போது அப்பகுதியில் சாலையை யாரும் கடக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துவாக்குடி போலீஸ் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்தபோதும், அங்கு நீண்ட நேரமாக போலீசார் வரவில்லை என்று அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.