"விரிவுரையாளர்கள் பணி நீக்கம்-உண்மையில்லை" - உயிர்கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்


விரிவுரையாளர்கள் பணி நீக்கம்-உண்மையில்லை - உயிர்கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்
x

கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உயிர்கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

சென்னை,

கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உயிர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களைப் பணிநீக்கம் செய்யுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் நோக்கம் தற்போது பணிபுரிந்துவரும் கவுர விரிவுரையாளர்களை நீக்குவது அல்ல. இதுவரை இல்லாத வகையில், முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆணைகளுக்கு இணங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொள்ளலாம். அவர்களுக்கு நேர்காணலில் மொத்தமுள்ள 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாக வழங்கப்படவுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளன. கவுரவ விரிவுரையாளர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்று பணிவாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் ஒரு சில கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. அவர்களும் போராட்டத்தைக் கைவிட்டு அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story