உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை


உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
x

கால்நடைகளை சாலையில் சுற்றித்திரியவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை என பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

கால்நடைகளை சாலையில் சுற்றித்திரியவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை என பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்துக்கு இடையூறு

பட்டுக்கோட்டை நகர பகுதியில் கால்நடை வளர்க்கும் சிலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை தினமும் நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரிய விடுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நடக்கும் சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்தும், நகர் மன்ற உறுப்பினர்களிடமிருந்தும் பலமுறை புகார் வந்த வண்ணம் உள்ளது.

தண்டனைக்குரிய குற்றம்

இதுதொடர்பாக பலமுறை கால்நடை வளர்ப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மூலம் நகரில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிலர் தொடர்ந்து கால்நடைகளை தெருவில் திரிய விட்டு விடுகிறார்கள். வீட்டில் வளர்க்கும் மாடுகளை சாலையில் திரிய விடுவது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற பகுதி கால்நடைகள் ஒழுங்குமுறை சட்ட விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டப்படி நடவடிக்கை

பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் தங்கள் கால்நடைகளை கைப்பற்றப்பட்டு அபராத கட்டணம், பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதோடு காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை சாலையில் திரியக்விடாமல் தங்கள் சொந்த பொறுப்பில் பராமரிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story