மருத்துவர்கள் துணையாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை


மருத்துவர்கள் துணையாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2022 6:30 PM GMT (Updated: 2022-11-25T00:01:00+05:30)

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய மருத்துவர்கள் துணையாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

விழுப்புரம்


விழுப்புரம்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து புதுமண தம்பதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, சமூகநலத்துறை அலுவலர் ராஜம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, டாக்டர் ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் கலெக்டர் மோகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

பெண் குழந்தைகள் உயிர் வாழ்தல், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை உறுதி செய்து அவர்களின் பிறப்பை போற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிவதில் ஆர்வம் காட்டக்கூடாது. இதற்கு மருத்துவர்கள் துணையாக இருந்து சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகளுக்கு பேறுகால நிதியுதவியாக ரூ.18 ஆயிரம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 2 பெண் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் பட்டதாரியாக இருந்தால் ரூ.50 ஆயிரம், பள்ளி அளவில் படித்து முடித்திருந்தால் ரூ.25 ஆயிரமும் வைப்புத்தொகையாக செலுத்தும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு குழந்தை பிறந்ததில் இருந்து கல்லூரி படிப்பதற்கும், வேலைவாய்ப்பிற்கு செல்வதற்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

181 சேவை

பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் நேரத்தில் புகார் தெரிவிக்க 181 என்ற இலவச தொலைபேசி எண் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த எண்ணுக்கு மாதத்துக்கு குறைந்தது 75 முதல் 150 வரையிலான அழைப்புகள் வருகின்றன. அதன்பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் ஏதேனும் சுணக்கம், குறைகள் இருந்தால் எனது கவனத்திற்கு உடனடியாக கொண்டு வரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story