பெண் ஊராட்சி தலைவரின் உறவினர்கள் தலையிட்டால் சட்டப்படி நடவடிக்கை
ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சி தலைவரின் உறவினர்கள் தலையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிப்பாளையம்:
ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சி தலைவரின் உறவினர்கள் தலையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தினமும் வந்து, அலுவலக செயல்பாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் அனைத்து திட்டப்பணிகள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டப்படி நடவடிக்கை
ஒரு சில ஊராட்சிகளில் ஊராட்சி நிர்வாகத்தில், பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் தலையிடுவது குறித்து புகார்கள் தொடர்ந்து வருகிறது. அவர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதை மீறினால் அவர்கள் மீது 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவிக்கலாம்.
கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்
நேரில் வர இயலாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக, மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04365 253052, 04365 253054 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, தங்கள் கோரிக்கைகளை தெரியப்படுத்தினால் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சவுந்திரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.