பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம்


பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம்
x

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், பெண்களுக்கு பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பெண்கள் தங்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படும் பட்சத்தில் புகார் தெரிவிக்கும் நடைமுறைகள் குறித்தும், தங்களிடம் வரப்பெறும் பாலியல் ரீதியான புகார்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.

மேலும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் குறித்த விழிப்புணர்வு என்பது, தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி, தங்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போது புகார் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெறும் என்பதுகூட விழிப்புணர்வு ஆகும்.

எனவே பெண்கள் அனைவரும் பணிபுரியும் இடங்களில் தங்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் நிகழும்பட்சத்தில், மேற்கொள்ள வேண்டிய சட்ட நடைமுறைகளை முழுமையாக தெரிந்துகொள்வதுடன், அவற்றை தனது சுதந்திரத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்று தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு 'பி' பட்டியல் வழக்கறிஞர் பார்வின் பானு, தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயகுமாரி ஜெமி ரத்னா, மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக் குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ராஜேந்திரகண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story