திண்டிவனத்தில் முதியோருக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டிவனத்தில் முதியோருக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டிவனம்,
திண்டிவனம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் திண்டிவனம் கோட்ட வருவாய்த்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ரகுமான் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தார். திண்டிவனம் முதன்மை சார்பு நீதிபதி தனம் வரவேற்றார்.
முதியோர்களுக்கான சட்ட விளக்கம் மற்றும் ஜாமீன், கடன் பத்திரங்கள் குறித்து திண்டிவனம் பார் அசோசியேஷன் தலைவர் சண்முகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
முதியோர் நல சட்டம், பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு சட்டம் 2007 குறித்து அட்வகேட் அசோசியேஷன் வக்கீல் விஜயன், மோட்டார் வாகன சட்டம் குறித்து வழக்கறிஞர் நல சங்க கிருபாகரன், முதியோருக்கான சொத்துரிமை சட்டம் குறித்து வக்கீல் துளசி, முறையான பாதுகாப்பான முதலீடு அல்லது சேமிப்பு குறித்து வக்கீல் அருணகிரி ஆகியோரும் விளக்கி பேசினர். தொடர்ந்து பத்திரப்பதிவுகள், ஓய்வூதியம் குறித்து மாவட்ட பதிவாளர் புனிதா விளக்கி பேசினார் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 125 மற்றும் ஜீவனாம்சம் சட்டங்கள் குறித்து திண்டிவனம் நீதித்துறை நடுவர் கமலாவும், முதியோர் உடல் நலம் பாதுகாத்தல் மற்றும் மருத்துவ காப்பீடு சட்டங்கள், இலவச சட்டஉதவி பற்றி மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி தனலட்சுமியும் பேசினார் முடிவில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் நன்றி கூறினார்.