எலுமிச்சம் பழம் கிலோ ரூ.5-க்கு விற்பனை


எலுமிச்சம் பழம் கிலோ ரூ.5-க்கு விற்பனை
x

கீரமங்கலம் பகுதியில் எலுமிச்சம்பழம் ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை

எலுமிச்சை உற்பத்தி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், பேற்பனைக்காடு, நெய்வத்தளி, பெரியாளூர், பாண்டிக்குடி உள்பட கீரமங்கலத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 10 வருடங்களாக தென்னை, பலா உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 5 டன் முதல் 10 டன் வரை உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுரை, கோயம்புத்தூர், கேரளா உள்பட பல பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கிலோ ரூ.5

கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கைகாட்டி, மாங்காடு பூச்சிகடை, மறமடக்கி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகள் மூலமாகவும், தனியாகவும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அங்கு குளிர்பான கடைகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.20-க்கும் ரூ.10-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. சில நாட்களாக ரூ.10-க்கும் கீழே குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ ரூ.7-க்கும் ரூ.5-க்கும் கொள்முதல் செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு இழப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது குளிர் பானங்களின் விற்பனை குறைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக படிப்படியாக விலை குறைந்து கிலோ ரூ.10-க்கும் கீழே விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் தோட்டங்களில் பழங்கள் சேகரிக்கும் கூலிக்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை என்றனர்.

பலத்த நஷ்டம்

எலுமிச்சம்பழம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கூறுகையில், கீரமங்கலம் சுற்றியுள்ள விவசாயிகள் கொண்டு வரும் எலுமிச்சம்பழங்களை அன்றாடம் வெளிச்சந்தை விலையை வைத்தே கொள்முதல் செய்கிறோம். கடந்த சில நாட்களாக கொள்முதல் விலையைவிட வெளியூர்களில் விற்பனை விலை குறைவதால் பலத்த நஷ்டம் ஏற்படுகிறது.

ஆனாலும் விவசாயிகளிடம் கொள்முதலை நிறுத்தாமல் வாங்கி வருகிறோம் என்றனர்.


Next Story