புதிய விவசாயிகளிடம் மட்டுமே கொப்பரை கொள்முதல்
புதிய விவசாயிகளிடம் மட்டுமே கொப்பரை கொள்முதல்
போடிப்பட்டி
அரசு கொப்பரை கொள்முதல் மையங்களில் அக்டோபர் 31 வரை கொள்முதல் செய்யப்படும் என்று கால நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விவசாயிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆதார விலை
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய், இளநீர் போன்றவை தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதமாக அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை இறுதி வரை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (நேபட்) மூலம் கொள்முதல் செய்து வந்தது. அதன்படி ஒரு கிலோ பந்து கொப்பரை 110 ரூபாய்க்கும், அரவை கொப்பரை 105.90-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.அரசு அறிவித்தபடி 6 மாதங்கள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையிலும் வெளிச்சந்தையில் கொப்பரை விலை உயரவில்லை. எனவே மீண்டும் அரசு கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தற்போது கொப்பரை கொள்முதல் தொடங்கியுள்ளது.ஆனால் இது விவசாயிகளுக்கு பெரிய அளவில் பலனளிக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதிய விவசாயிகள்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பிப்ரவரி முதல் ஜூலை வரை 6 மாதங்களுக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.இதனையடுத்து ஆகஸ்டு மாதத்தில் கொள்முதல் நடைபெறாத நிலையில் மேலும் 2 மாதங்களுக்கு கொள்முதல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 2 மாத கால நீட்டிப்புக்குப் பதிலாக புதிதாக கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் கடந்த 6 மாதங்களில் கொள்முதல் மையங்களில் கொப்பரை விற்பனை செய்த விவசாயிகளிடமிருந்து தற்போது கொள்முதல் செய்யப்படுவதில்லை. புதிய விவசாயிகளிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு விவசாயியிடம் ஏக்கருக்கு 216 கிலோ என்ற அளவில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2500 கிலோ கொள்முதல் செய்யப்படுகிறது. எந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த கொள்முதல் அளவு நிர்ணயம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.
ஏனென்றால் ஒரு ஏக்கரில் குறைந்த பட்சம் 60 தென்னை மரங்கள் இருக்கும்.தென்னை மரங்களிலிருந்து ஆண்டுக்கு 8 முறை காய்கள் பறிக்க முடியும்.அந்தவகையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் காய்கள் பறிக்க முடியும்.இந்த 10 ஆயிரம் தேங்காய்களிலிருந்து குறைந்த பட்சம் 1300 கிலோ கொப்பரை உற்பத்தி செய்ய முடியும்.இதில் வெறும் 216 கிலோ மட்டுமே அரசு கொள்முதல் செய்துள்ளது.ஒரு ஏக்கரில் மீதமுள்ள 1000 கிலோவுக்கு மேல் கொப்பரையை வெளி சந்தையில் தான் விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
புள்ளி விபரங்கள்
வெளி சந்தையில் கொப்பரை விலை உயர்வைத் தடுக்க பெரு நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளைக் கையாள்கின்றன. எண்ணெய் உற்பத்தி மற்றும் பிஸ்கெட் தயாரிப்பு போன்ற தேங்காய்களை அதிகம் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வது போல நாடகமாடி விவசாயிகளை அணுகுகிறார்கள்.அவர்களிடமிருந்து அந்த பகுதியில் அந்த ஆண்டில் தேங்காய் உற்பத்தி, கொப்பரை உற்பத்தி உள்ளிட்ட புள்ளி விபரங்களை சேகரிக்கிறார்கள்.அதன்மூலம் தங்களுக்குத் தேவையான அளவை விட உபரியாக உற்பத்தி இருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.அதனடிப்படையிலேயே வெளிச்சந்தையில் விலையை தீர்மானிக்கிறார்கள்.
அதேநேரத்தில் தென்னை வளர்ச்சி வாரியமோ, அரசோ இதுபோன்ற புள்ளி விபரங்கள் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.யாரிடமோ பெறப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் யார் யாரோ திட்டம் தீட்டுகிறார்கள்.பொதுவாக மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தேங்காய் உற்பத்தி அதிக அளவில் இருக்கும்.அந்த காலகட்டத்தில் கொப்பரை விலை குறைவைத் தடுக்க கொப்பரை கொள்முதல் செய்வது வரவேற்கக்கூடியதாகும். ஆனால் இந்த காலகட்டத்தில் தேங்காய் விளைச்சல் அதிகரிப்பதால் கொப்பரை உற்பத்தியையும் அதிகரிக்கிறோம்.
இருப்பு
கடந்த பிப்ரவரியில் தங்களிடமிருந்த கொப்பரையை விற்பனை செய்த விவசாயிகளிடம் தற்போது ஏக்கருக்கு 600 கிலோவுக்கு மேல் இருப்பு இருக்கும்.அதனை முழுவதுமாக வெளிச்சந்தையில் தான் விற்றாக வேண்டிய நிலை உள்ளது.ஆனால் வெளி சந்தையில் ஒரு கிலோ கொப்பரை ரூ. 75 க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ. 20 க்கு மேல் விற்பனையான தேங்காய் இப்போது பாதி விலைக்கே விற்பனையாகிறது.மேலும் ரூ. 1-க்கு விற்ற உரி மட்டை தற்போது 25 பைசாவுக்கும் வாங்க ஆளில்லாத நிலையில் உள்ளது.தேங்காய் மட்டை உரிக்க ஒரு காய்க்கு 85 பைசா, உடைக்க 35 பைசா கூலி கொடுக்கிறோம். இதுதவிர களம் அமைக்க, பராமரிக்க என பெருமளவு செலவு செய்ய வேண்டியதுள்ளது.ஆனால் தற்போதைய விலையால் நஷ்டத்தையே சந்திக்கிறோம்.எனவே அரசு கணக்கீடு படி வைத்துக் கொண்டாலும் அரையாண்டுக்கு ஏக்கருக்கு 216 கிலோ கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ம் அரையாண்டுக்கான கொள்முதலாகக் கருதி அனைத்து விவசாயிகளிடமும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
-