குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கரடி நடமாட்டம்


தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:46 PM GMT)

ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

சிறுத்தை புகுந்தது

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்தநிலையில் ஊட்டி தொட்டபெட்டா அடுத்த மைனலா லக்கன்மனை கிராமத்தில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இரவு நேரத்தில் அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் வீடியோவாக எடுத்து எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவில் பிடிக்கப்படும்

இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் குன்னூர் அடுத்த அம்பிகாபுரம் மற்றும் ஜெகதலா பேரூராட்சி பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாடியது. மேலும் உபதலை, மவுண்ட் பிளசன்ட் பகுதியில் கரடி நடமாட்டம் இருந்தது. மார்லிமந்து குடியிருப்பு பகுதியில் புகுந்து மாடுகளை செந்நாய்கள் தாக்கியது. இது தவிர குன்னூர் அருகே உள்ள ஹைபீல்டு பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலைக்குள் இரவு நேரத்தில் கரடி ஒன்று நுழைந்தது‌. பின்னர் அங்கிருந்த நுழைவு வாயிலை ஏறி குதித்து சுமார் 2 கிலோ சாக்லேட்டை சுவைத்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் புகுந்துள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், சிறுத்தை விரைவில் பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


Next Story