வால்பாறையில் மேய்ச்சலுக்கு சென்ற கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்
வால்பாறை
வால்பாறையில் மேய்ச்சலுக்கு சென்ற கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
இறந்து கிடந்த கன்றுக்குட்டி
வால்பாறை அருகில் உள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு 17-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதிக்கு வேலைக்கு சென்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்ட பகுதியில் கன்று குட்டி ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் வெள்ளமலை எஸ்டேட் மட்டம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் மேய்ச்சலுக்கு சென்ற தனது கன்று குட்டியை காணவில்லை என தேடி வந்துள்ளார். பின்னர் தேயிலை தோட்ட பகுதியில் இறந்து கிடந்த கன்று குட்டி தனது கன்று குட்டி தான் என்று அறிந்ததும் இது குறித்து வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் இறந்து கிடந்த கன்று குட்டியின் உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். இதில் அது சிறுத்தையின் கால்தடம் என்பதும், கன்றுக்குட்டியை சிறுத்தைதான் கடித்துக் கொன்றதும் தெரியவந்தது
கண்காணிப்பு கேமரா பொருத்தம்
இதையடுத்து தேயிலை தோட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அந்த பகுதியில் நடமாடும் சிறுத்தை குறித்து கண்டறிவதற்கும், அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்பதை உறுதி செய்வதற்காகவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். கால்நடைகளை வளர்ப்பவர்கள் இரவு நேரத்தில் கால்நடைகளை வெளியே சுற்றித்திரிய விடாமல் பட்டிகளில் அடைத்து வைத்து பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.
மேலும் கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.