அணைக்கட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்


அணைக்கட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
x

அணைக்கட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம், இருப்பதாகவும், எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.

வேலூர்

பூனை சாவு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை மற்றும் ஊனை பள்ளதூர் கிராமங்கள் மலையை ஒட்டி உள்ளன. இந்தப் பகுதியில் விவசாயிகள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை சுப்பிரமணி என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை வாசலில் இறந்து கிடந்தது.

பூனையை ஏதோ ஒரு மிருகம் கடித்ததாக நினைத்து சுப்பிரமணி, அந்த பூனையை புதைத்து விட்டார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு பூனை எதனால் இறந்தது என்பதை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

சிறுத்தை

அப்போது சிறுத்தை வடிவிலான மிருகம் ஒன்று பூனையை கடித்து குதறுவது பதிவாகி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுப்பிரமணி ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

பின்னர் அவர்கள் பூனையை கொன்றது சிறுத்தை அல்ல எனவும் இதே உருவத்தில் உள்ள காட்டு பூனையாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் கேமராவில் பதிவான காட்சிகளை மேல் அதிகாரிக்கு அனுப்பி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பாக...

அணைக்கட்டு தாலுகா ஊனை மோட்டூர் கிராமத்தில் கண்காணிப்பு கேமரா ஒன்றில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும்படி வனத்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்பேரில் வனத்துறையினர் ஊனைமோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை பதுங்கி உள்ளதா என்று கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை வனத்துறையினரிடம் பிடிபடவில்லை. எனவே ஊனை மோட்டூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story