ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள்
ஊட்டி அருகே ஊருக்குள் சிறுத்தைகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
ஊட்டி
ஊட்டி அருகே ஊருக்குள் சிறுத்தைகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டமும் அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் அதிகாலை நேரத்தில் தூனேரி கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சாலையில் ஒய்யாரமாக சென்ற சிறுத்தை, உணவு தேடி அக்கம்பக்கத்தில் பார்த்தவாறு உலா வந்தது. பின்னர் அருகில் இருந்த புதருக்குள் சென்று சிறுத்தை மறைந்து விட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
பொதுமக்கள் அச்சம்
இதேபோல் நேற்று முன்தினம் மாலை ஊட்டி அருகே கடநாடு கிராமத்திற்குள் 2 சிறுத்தைகள் புகுந்து உள்ளன. இதை கண்ட பொதுமக்கள் சத்தமிட்டனர். இதையடுத்து 2 சிறுத்தைகளும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வந்து சாலையை கடந்து சென்றன. அப்போது அந்த 2 சிறுத்தைகளும் அந்த வழியாக வந்த வாகனத்தை பார்த்தவாறு, சில வினாடிகள் நின்ற பிறகு வனப்பகுதிக்குள் ஓடின. கிராமங்களுக்குள் சிறுத்தைகள் புகுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் கிராமங்களுக்குள் புகுந்து வரும் சிறுத்தைகளால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே கிராம மக்கள் யாரும் இரவில் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.