ஊட்டி காந்திநகர் பகுதியில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை-குடியிருப்புவாசிகள் அச்சம்


ஊட்டி காந்திநகர் பகுதியில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை-குடியிருப்புவாசிகள் அச்சம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி காந்திநகர் பகுதியில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை-குடியிருப்புவாசிகள் அச்சம்

நீலகிரி

ஊட்டி

ஊட்டி காந்திநகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடிச் சென்றதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மேல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விசித்ரா. இவர் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று தனது குடியிருப்பின் அருகே உள்ள மேய்ச்சல் நிலத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது மேய்ச்சல் நிலத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள், உடனே ஆடுகளை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை தூரத்தில் இருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த விசித்திரா புதர்கள் மறைந்து கொண்டார். அங்கு வந்த சிறுத்தைகள் 2 ஆடுகளை வேட்டையாடி வாயில் கவ்விகொண்டு சென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த விசித்ரா சத்தம் போட்டார். இதில் ஒரு சிறுத்தை ஆட்டை வனப்பகுதிக்குள் கவ்வி சென்ற நிலையில், மற்றொரு சிறுத்தை ஆட்டை மேய்ச்சல் நிலத்தில் விட்டு விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வேட்டை சம்பவத்தில் மேலும் ஒரு சில ஆடுகளுக்கு லேசாக காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:-

பகல் நேரங்களில் வேட்டை

கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் மனித வனவிலங்கு முதல் அதிகரித்துவிட்டது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் வந்து செல்கிறது.

காந்திநகர் பகுதியை பொறுத்தவரை நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்டது. அந்த சமயங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை சிறுத்தைகள் வேட்டையாடி சென்றன.

ஆனால் தற்போது பகல் நேரங்களிலேயே குடியிருப்புகளின் அருகே சிறுத்தைகள் உலா வருவதும் வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி செல்வதலும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் குடியிருப்பின் அருகே உலா வந்து கால்நடைகளை வேட்டையாடிச் செல்லும் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story