கூடலூரில் நெகிழ்ச்சி சம்பவம் : மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கின் உடலை பார்த்து சக குரங்குகள் கண்ணீர்
கூடலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கின் உடலை பார்த்து சக குரங்குகள் கண்ணீர் விட்ட சம்பவம் பொதுமக்கள், அதிகாரிகளை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
கூடலூர்
கூடலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கின் உடலை பார்த்து சக குரங்குகள் கண்ணீர் விட்ட சம்பவம் பொதுமக்கள், அதிகாரிகளை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
மின்சாரம் தாக்கியது
கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள், வனம் உள்ளதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி நகருக்குள் வருவது வழக்கம். இதில் உணவு தேடி குரங்குகள் கூட்டமாக ஊருக்குள் வந்து வீடுகளில் வைத்திருக்கும் பொருட்களை தினமும் எடுத்துச் செல்கிறது.
இதனால் குரங்குகள் அட்டகாசம் தொடர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சிக்குட்பட்ட 18-ம் வார்டில் உள்ள அப்துல் கலாம் நகரில் நேற்று காலை சில குரங்குகள் அப்பகுதிக்கு வந்தது. அப்போது ஒவ்வொரு கட்டிடத்தில் இருந்து வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தவாறு குரங்குகள் இருந்தது. அதில் ஒரு குரங்கு மின்கம்பியில் சிக்கியது. இதனால் அந்த குரங்கு மின்சாரம் தாக்கி உடனடியாக பரிதாபமாக உயிரிழந்தது.
பாசப் போராட்டம்
இதைக் கண்ட பொதுமக்கள் மின்வாரியம், தீயணைப்பு, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த குரங்கின் உடலை மீட்டனர்.
இதனிடையே தங்களுடன் வந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடக்கும் குரங்கின் உடலை கண்டு சக குரங்குகள் கண்ணீர் விட்டது. அதில் ஒரு குரங்கு துக்கம் தாளாமல் இறந்து கிடக்கும் குரங்கின் உடலை கண்டு அங்கும் இங்குமாக கதறியவாறு ஓடியது.
இந்த பாசப்போராட்டத்தை கண்ட பொதுமக்கள் மற்றும் துறை அதிகாரிகள் மத்தியில் பரிதாபத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பின்னர் வனத்துறையினர் குரங்கின் உடலை கைப்பற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.