பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார்.
இந்தியாவுடன் கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இணைய வைத்தவர். அவரது 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், படேலின் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கெவாடியாவில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல். முருகன் பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவாக அமைய வழிவகுத்த பாரத ரத்னா சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தியில் ஒற்றுமைக்கான சின்னமாய் விளங்கும் அவரை நினைவு கூற வேண்டும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக வர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவாக அமைய வழிவகுத்த பாரத ரத்னா சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தியில் ஒற்றுமைக்கான சின்னமாய் விளங்கும் அவரை நினைவு கூர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.