தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுங்கள்
டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுங்கள் என ஒன்றிய குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
ஒன்றிய குழு கூட்டம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமைதாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரகுமார், ஜெகநாதசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தனக்கு குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் பச்சிளம் குழந்தையுடன் வந்து கலந்துகொண்டார். யூனியன் தலைவர் மழைக்காலம் என்பதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனது கைக்குழந்தையுடன் கலந்து கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டது.
பின்பு தொடங்கிய மன்ற கூட்டத்தில் 22 தீர்மானங்கள் மன்ற பொருளாக வைக்கப்பட்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ.19,93621 செலவினங்களை மன்றம் அங்கீகரிக்க உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடவடிக்கை
தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய ஒன்றிய குழு தலைவர் திவ்யாபிரபு பேசுகையில்,
மழைக்காலம் தொடங்கி விட்டதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இந்நிலையில் மக்களுக்கு தொற்றுகள் பரவாத வகையில் அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி அன்புச் செழியன், ரம்யா செல்வகுமார், உமா சோணமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.