"உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்"


உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்
x
தினத்தந்தி 6 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 6:45 PM GMT)

விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை ஏற்படுத்தாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் 3 கிராம விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தேனி

விவசாயிகள் மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார்.

கூட்டத்தில், கோடாங்கிபட்டி, வலையப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாங்கள் வலையப்பட்டி பகுதியில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல், கொட்டக்குடி ஆற்றுக்கு வடக்கு புறமும், ரெயில் பாதையின் தெற்கு புறமாகவும் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலங்களுக்கு செல்வதற்கு தனியாக பாதை கிடையாது. ரெயில் பாதையின் தெற்கு புறமாக இருந்த மண் பாதையில் தான் சென்று வந்தோம்.

போராட்டத்தில் ஈடுபடுவோம்

போடி-மதுரை அகல ரெயில் பாதை திட்டம் காரணமாக, வலையப்பட்டி அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து தெற்குப்புறமாக நீண்ட தடுப்புச்சுவர் கட்டப்பட்டதால் அந்த மண் பாதையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால், ஒத்தவீடு வழியாக கொட்டக்குடி ஆற்றைக் கடந்து கொன்றை மட்டை ஓடை வழியாக சென்று வருகிறோம். மழை காலங்களில் ஆற்றை கடந்து போக முடியாது. இங்கு கொட்டக்குடி ஆற்றில் சிறிய பாலம் அமைத்தால் விவசாய நிலங்களுக்கு சென்று வர முடியும்.

விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, எங்களின் விவசாய நிலங்களுக்கு சென்று வர பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தால் 3 கிராம விவசாயிகளும், கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

தி.மு.க. உறுப்பினர் நூதன மனு

பெரியகுளம் கும்பக்கரை சாலையை சேர்ந்த தி.மு.க. மகளிரணி உறுப்பினர் அமுதேஸ்வரி, கோரிக்கைகள் அடங்கிய பேனருடன் வந்து நூதன முறையில் கோரிக்கை மனு கொடுத்தார். அவருடன் மக்கள் சிலரும் வந்தனர். அவர் கொண்டு வந்த பேனரில், 'பெரியகுளம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வவ்வால் துறை அணை கட்ட வேண்டும். அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள், சுருளி, கும்பக்கரை அருவிகளை மாபெரும் சுற்றுலா தலங்களாக உருவாக்க குழு அமைக்க வேண்டும். மாவட்டத்தில் தொழிற்சாலைகள் பல உருவாக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

தர்ணா முயற்சி

அதுபோல், கலெக்டர் அலுவலகம் முன்பு தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த மஞ்சம்மாள் (வயது 70) என்பவர் தர்ணா போராட்டம் நடத்த முயன்றார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, "1991-ம் ஆண்டு தேனி விஸ்வநாததாஸ் காலனியில் வசித்தோம். வெளியூர் சென்றிருந்த நிலையில் அந்த வீட்டை இடித்து விட்டு நகராட்சி சார்பில் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதுதொடர்பாக பல வழிகளில் முறையிட்டதால் வீரப்ப அய்யனார் கோவில் காட்டுப் பகுதியில் இடம் கெடுக்கப்பட்டது. அந்த பட்டாவை ரத்து செய்து விட்டு விஸ்வநாததாஸ் காலனியில் வீடு கொடுக்க வேண்டும்" என்றார். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் போராட்ட முயற்சியை கைவிட்டார்.


Related Tags :
Next Story