காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றி பசுமை புரட்சியை ஏற்படுத்துவோம்; எடப்பாடி பழனிசாமி


காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றி பசுமை புரட்சியை ஏற்படுத்துவோம்; எடப்பாடி பழனிசாமி
x

காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றி பசுமை புரட்சியை ஏற்படுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருச்சி

பாராட்டு விழா

திருச்சி துவாக்குடியில் உள்ள பாய்லர் ஆலை நிறுவன வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து அவர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு முயற்சி மேற்கொண்டதற்காக அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு துணை நிற்போம்

ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் எழுச்சி மாநாடு மதுரையில் நடக்கிறது. அதற்காக வெளியிட்ட இலச்சினையில் ஜல்லிக்கட்டு வீரர் காளையை அடக்குவது போன்ற படம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு வீரரையும் கவுரவப்படுத்துகிறோம். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போரையும் பாராட்டுகிறோம்.அ.தி.மு.க.வை பொறுத்தவரை பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெற துணை நிற்போம். கிராமங்களில் வாழ்கிற நம்மை போன்ற விவசாயிகள், இளைஞர்களுக்கு வீர விளையாட்டு தான் மகிழ்ச்சி தரும்.

காவிரி-குண்டாறு திட்டம்

ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ?. அதுபோல் விவசாயத்துக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீரை முறையாக விவசாயத்துக்கு வழங்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். மேடான வறட்சி பகுதி செழிப்பான பகுதியாக மாற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வறட்சியான மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளம்பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த திட்டத்தை நிறைவேற்ற தொடங்கினோம்.

பசுமை புரட்சி

இந்த திட்டத்துக்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணி தொடங்க புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு முதற்கட்ட பணியை தொடங்கி வைத்தேன். தற்போது அந்த பணியையும் கிடப்பில் போட்டு விட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள். நிச்சயம் அனைவரது ஒத்துழைப்போடு, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். அப்போது, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணியை தொடங்கி வைப்போம். அது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. அரசே அந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றி பசுமை புரட்சிைய ஏற்படுத்துவோம்.அ.தி.மு.க. ஆட்சியில் வேளாண்மை துறைக்கும், நீர்மேலாண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பருவகாலங்களில் பெய்கிற மழைநீர் வீணாகாமல் தேக்குவதற்காக ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டன. குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்றி வண்டல் மண்ணை விவசாயிகளிடமே கொடுத்தோம். இவையெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு கொண்டு வந்த அற்புதமான திட்டம்.

கால்நடை பூங்கா

தற்போது இன்றைய ஆட்சியாளர்கள் அந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஒரு லோடு மண் விவசாயி அள்ள முடியாது. எல்லா விவசாயிகளுக்கும் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு தொழில். அதற்காக தான் சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா ரூ.1,000 கோடியில் உருவாக்கினோம். அதையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். அதில் ஒரு பகுதியை நான் திறந்து வைத்தேன். மற்றபகுதி திறக்கப்படாமல் உள்ளது. விவசாயத்துக்கும், நீர் மேலாண்மைக்கும் அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பதை விவசாயிகள் எண்ணி பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள், கேடயம் உள்ளிட்ட பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.


Next Story