சைபர் குற்றங்களை சைபர் ஆக்குவோம்


வலைத்தள வலைகளில் விழாமல் இருந்து சைபர் குற்றங்களை சைபர் ஆக்குவோம்.

விருதுநகர்

'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?

சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, 'சத்தம் போட்டே குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை" என்கிறார்.

பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார்.

இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான்.

இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப் படுகிறோம்.

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.

அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

திருமண மோசடி

* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.

சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

சவாலான பணி

புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.

சைபர் குற்றங்கள், அதன் பாதிப்புகள், தடுக்கும் வழிமுறைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர்:-

சைபர் குற்றங்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். ஒவ்வொரு போலீஸ்நிலையத்திலும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திலேயே புகார் மனுவை கொடுத்தால் அங்கிருந்து சைபர் குற்ற பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் சைபர்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதற்கான மென்பொருளை பயன்படுத்தியே பணத்தை பறிக்கும் நிலை உள்ளது. தற்போது சைபர் கிரைம் பிரிவிலும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதற்கான மென்பொருள் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடிகிறது.

சைபர் குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தில் உள்ளதால் தங்கள் பெயர் மற்றும் முகவரியை தெரிவிக்க தயக்கப்படுகிறார்கள். எனவே நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருட்களை மீட்டு கொடுத்தாலும் அவரது பெயர் விவரங்களை தெரிவிப்பதில்லை. சைபர் குற்றவாளிகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு குணசுந்தரம்:-

சைபர் குற்றங்கள் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். நான் பணியில் இருக்கும் பொழுது எனக்கு திடீரென ஒரு செல்போன் அழைப்பு வந்தது ஓடிப்போகலாமா என்று செல்போனில் பேசியவர் கேட்டார். நான் உடனடியாக அந்த என்னை மீண்டும் தொடர்பு கொண்ட போது ஒரு இளைஞர் பேசினார். அவரிடம் எங்கு ஓடி போக வேண்டும் நான் வரவா என்று கேட்டவுடன் பதறிப் போய் இணைப்பைத் துண்டித்தவரை எச்சரித்தேன். அதே போன்று காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராமத்தில் இளம்பெண் செல்போனில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தபோது அப்பெண்ணிடம் விசாரித்த போது காதலன் அங்கு வர சொன்னதாக தெரிவித்தார். தொடர்பு கொண்ட எண் வட மாநிலத்தில் உள்ளது என தெரிய வந்தது.

பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தோம். ஒரு இளம் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் வந்தால் உடனடியாக அந்த செல்போன் சிம் கார்டை எடுத்து தூர வீசி எறிந்து விட வேண்டும். இந்த எண்ணைத்தான் பலருக்கும் கொடுத்துள்ளேன் என தொடர்ந்து வைத்திருப்பது ஆபத்தை விளைவிக்கும். எனவே சைபர் குற்றங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். பணத்திற்காக ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். எனவே எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது நமது கடமை.

வழக்குப்பதியவில்லை

வக்கீல் சங்க செயலாளர் நல்லபெருமாள்:-

வெளிநாடுகளில் உள்ளவர்களால் பாதிக்கப்படும் பொழுது தற்போது உள்ள சட்டங்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. உதாரணமாக விருதுநகரில் மத்திய அரசு துறையில் அதிகாரியாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் மகளுக்கு கனடா நாட்டில் வரன் உள்ளதாக தொடர்பு கொண்டு திருமண நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வழியில் தான் கொண்டு வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் சுங்கத்துறையில் பிடிபட்டு விட்டதாகவும் அதற்கு பணம் கொடுத்தால் தான் நிச்சயதார்த்தத்திற்கு வர முடியும் என்று கூறி ரூ.30லட்சம் வரை வங்கி கணக்கு மூலம் ஏமாற்றப்பட்டது.

இதுகுறித்து விருதுநகர் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெளிநாடு வங்கிக்கணக்குகள் மூலம் ஏமாற்றப்படுவதால் அதில் நடவடிக்கை எடுக்க மேலும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

வக்கீல் சுந்தரம்:- சைபர் குற்றங்கள் பெருகிவரும் நிலையில் அதில் முற்றிலுமாக நடவடிக்கை எடுக்க கூடுதல் சட்டங்கள் இயற்ற வேண்டும். மேலும் தற்போதைய நிலையில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு ஊரிலும் தனியாக சைபர் குற்றப்பிரிவு தொடங்க வேண்டும். அதன் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் மூலமே சைபர் குற்றங்களை குறைப்பதற்கும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்களை மீட்கவும் வாய்ப்பு ஏற்படும்.

போலீசாருக்கு அங்கீகாரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியர் வக்கீல் சவுந்தரராஜன்:-

தற்போது டிஜிட்டல் மயம் ஆகி வருவதால் செல்போன் மூலம் அனைத்து சேவைகளையும் பெற வசதிகள் உள்ளது போல் அதே அளவிற்கு பிரச்சனைகளும் உள்ளது. பண பரிவர்த்தனையின் போதும். ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தும் போதும் ஆதார் எண்கள் வைத்து பணம் எடுக்கும் போதும் பல்வேறு பண மோசடி நடைபெற்று வருகிறது. அதேபோல் செல்போன் மூலம் ஓ.டி.பி. எண்ணை தெரிந்து கொண்டு பணம் எடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸ் தொடங்கப்பட்ட நிலையில் பல்வேறு பண மோசடி சைபர் கிரைம் குற்றச்சாட்டுகள் தீர்வு காணப்படாமல் உள்ளது.

ஏனென்றால் பணத்தை பறி கொடுத்தவன் ஒரு புறத்திலும், பணத்தை எடுத்தவன் எந்த மாநிலத்தில் இருக்கிறானோ என்பது குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்களை எளிமைப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கைகள் கொண்டு வர வேண்டும். தற்போது டிஜிட்டல் கரன்சி வரை வளர்ந்துள்ள நிலையில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் சட்ட திட்டங்களையும் இயற்ற வேண்டும். எளிதில் போலீசார் நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு தனிப்பட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.

சமூக வலைத்தளம்

ராஜபாளையம் புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகன்யா:-

சைபர் கிரைம் குற்றங்கள் மிக அதிக அளவில் தற்போது நடந்து வருகிறது. காவல்துறையும் தொழில்நுட்ப உதவியால் குற்றங்களை எளிதில் கண்டுபிடித்து செயல்பட்டு வருகிறார்கள். எனினும் நாம் விழிப்போடு செயல்படுவது மிகவும் அவசியம். மொபைல் போனில் தேவையற்ற செயலிகளை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும். நாம் பயன்படுத்தும் செயலிகள் மூலமாகத்தான் சம்பந்தப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது. மொபைல் போன் பயன்படுத்தும் போது வெளிப்படை தன்மைகள் இருக்க வேண்டும். ஏதேனும் குற்றம் நிகழ்ந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க‌ அனைவரும் முன் வர வேண்டும். சமூக வலைத்தளங்களில் நம்மைப்பற்றிய தகவல்களை தெரிவிக்க கூடாது.



Related Tags :
Next Story