உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக முடிசூட்டு விழா: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு


உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக முடிசூட்டு விழா:   குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்  எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
x

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக முடிசூட்டு விழா நடைபெறுகிறது என்றும், தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும் ஆத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

சேலம்

ஆத்தூர்,

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூரில், மின்சார கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள், ஆட்சியின் அலங்கோலங்கள் ஆகியவற்றை எதிர்த்து இங்கே பேச வந்துள்ளேன். நாளைய தினம் (இன்று) மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். அவரது மகன் மு.க.ஸ்டாலினுக்கு அவர் முடி சூட்டினார். இப்போது அவரது மகனுக்கு முடி சூட்டு விழா நடக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறு, பாலாறு ஓடுமா? தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் நலன் கிடைக்காத ஆட்சி தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியில் 4 முதல்-அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் குடும்பமே தமிழகத்தை ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. ஒரு முதல்-அமைச்சரின் ஆட்சிக்கே தமிழகம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 4 முதல்-அமைச்சர்கள் என்றால் தாக்குப்பிடிக்குமா?

முடிவு கட்டுவோம்

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கும், தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டுவோம். தி.மு.க. என்றால் குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி. அது கட்சி அல்ல, கம்பெனி. இதில் யார் வேண்டும் என்றாலும் டைரக்டர் ஆகி கொள்ளலாம். அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் தான் அங்கே அமைச்சர்களாக, எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் இல்லாமல் செய்வது தான் மக்கள் விரோத தி.மு.க. அரசின் வேலையாக உள்ளது. கடந்த 20 மாத ஆட்சியில் என்னென்ன நலத்திட்டங்கள் செய்தீர்கள். நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளில் என்ன திட்டங்கள் செய்தோம் என ஒரே மேடையில் விவாதிக்கலாம் என முதல்-அமைச்சரை அழைத்தேன், வரவில்லை.

அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை பல முதியவர்களுக்கு தற்போது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் யார்? யாருக்கு? முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதோ அவர்களுக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

தொங்கி சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி

அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு புயல்களின் போது நிவாரண பணிகளை சிறப்பாக செய்தோம். அதேபோல் கொரோனா தொற்று பரவல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை அளித்து அந்த கஷ்டமான காலத்தை அ.தி.மு.க. ஆட்சியில் திறம்பட சமாளித்தோம். இன்றைக்கு மாண்டஸ் என்று ஒரு புயல் வந்தது. வந்த வேகத்தில் அது போய்விட்டது. அதனால் எந்த சேதமும் இல்லை.

ஆனால் சேதம் வந்தது போல் தமிழகத்தை முழுவதும் கண்காணிக்கிறோம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் அதில் விளம்பரம் தேடிக்கொள்கிறார். முதல்-அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் தொங்கி கொண்டு செல்கிறார். அவர் தொங்கி கொண்டு செல்லலாம் அவர் கட்சிக்காரர். ஆனால் திறமையான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்த வாகனத்தில் புட்போர்டில் ெதாங்கி கொண்டு செல்கிறார். இது வேதனை அளிக்கிறது. கண்டிக்கத்தக்க செயலாகும்.

மின்கட்டண உயர்வு

தற்போது சொத்து வரி, வீட்டு வரியை 100 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவு வேதனையில் உள்ளனர். மின்சார கட்டணம் தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது 53 சதவீத அளவு மின் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. முன்பு மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இப்போது மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என விடியா தி.மு.க. அரசை கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு ஆத்தூர் கடை வீதியில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து 2 ஆண்டுகள் ஆனதையொட்டி, மாரியம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு கோவிலை வலம் வந்து சாமி கும்பிட்டார்.

1 More update

Next Story