பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பயணம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பயணத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
விழிப்புணர்வு பயணம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" விழிப்புணர்வு நாட்டுப்புற கலைக்குழு நிகழ்ச்சி பயணத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெற்ற இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பெண் குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் போன்றவைகள் தொடர்பான பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மின்விசை நிதி
குடும்பத்தில் 2 பெண் குழந்தை மட்டும் இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அதில், ஒரு பெண் குழந்தையாக இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 பெண் குழந்தைகள் எனில் இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வழங்கும் முதல்-அமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகள் மயிலாடுதுறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பணி நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பம் கொடுக்கலாம்.
இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு நாட்டுப்புற கலைக்குழுவின் பயணமானது, மாவட்டம் முழுவதும் சென்று கிராமங்களில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.