தற்கொலை செய்த நகைக்கடை உரிமையாளர் கடையில் சிக்கிய கடிதத்தால் பரபரப்பு

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதால் தற்கொலை செய்த நகைக்கடை உரிமையாளரின் கடையில் சிக்கிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை,
போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதால் தற்கொலை செய்த நகைக்கடை உரிமையாளரின் கடையில் சிக்கிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நகைக்கடை உரிமையாளர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் ராஜசேகரன்(வயது 58). இவரது மனைவி தனலெட்சுமி. கடந்த மாதம் 22-ந் தேதி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார், ராஜசேகரன் கடைக்கு வந்து திருட்டு நகை வாங்கியதாக கூறி அவரது கடையில் சோதனை நடத்தினர். பின்னர் ராஜசேகரனையும் அவரது மனைவி தனலட்சுமியையும் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்து சென்றனர்.
ரெயில் முன்பாய்ந்து தற்கொலை
போலீசார் தன்னையும், தனது மனைவியையும் விசாரணைக்காக அழைத்து சென்றதால் நகைக்கடை உரிமையாளரான ராஜசேகரன் மிகுந்த வேதனை அடைந்தார்.இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி இரவு பட்டுக்கோட்டையை அடுத்த செட்டியக்காடு என்ற பகுதியில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
ராஜசேகரனின் தற்கொலைக்கு திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசாரின் துன்புறுத்தலே காரணம். எனவே இதில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், நகைக்கடை உரிமையாளர்கள், பொற்கொல்லர் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் தற்கொலை செய்த ராஜசேகரனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து திருச்சி கே.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
கடிதம் சிக்கியதால் பரபரப்பு
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராஜசேகரனின் கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் உள்ள பில் புக்கில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் சாவுக்கு காரணம் திருச்சி போலீஸ் என்று எழுதப்பட்டு இருந்தது.அந்த கடிதத்தை ராஜசேகரன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
அந்த கடிதத்தை ராஜசேகரன் தனது கைப்பட எழுதி வைத்து இருந்ததால் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் ராஜசேகரனின் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் வெளியான இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






