16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டல் கடிதம்-பொள்ளாச்சியில் போலீசார் தீவிர வாகன சோதனை
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
6 பேர் கைது
பொள்ளாச்சி குமரன் நகரில் கடந்த 22-ந்தேதி பா.ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் முன் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைக்க முயற்சி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் நகர மேற்கு போலீசார், வெடிப்பொருட்களை கையாடல் உள்பட 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் 7 தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த முகமது ரபீக், ரமீஸ் ராஜா, சாதிக் பாட்சா ஆகியோரை கடந்த 26-ந்தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் நேற்று முன்தினம் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த அப்துல் ஜலீல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள் அப்துல்ரகுமான், முகமது ரபீக் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் கடிதம்
இந்த நிலையில் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் காவல் துறை ஆய்வாளர் அவர்கள், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரியில்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த வேண்டும். என எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. குமரன் நகர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது. மேலும் தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டருக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.