நெல்லை கோட்டத்தில் தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி
நெல்லை கோட்டத்தில் தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது.
நெல்லை கோட்டத்தில் தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது.
கடிதம் எழுதும் போட்டி
இந்திய தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டியை உலக அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. '2047-ல் இந்தியா' என்ற தலைப்பில் இந்த போட்டி நடக்கிறது.
இந்த போட்டிக்கான கடிதங்களை அனுப்ப கடைசி தேதி வருகிற 31-10-2022 ஆகும். மேலும் கடிதங்களை ஸ்கேன் செய்து mygov portal என்ற அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். தபாலில் 31-10-2022 அல்லது அதற்கு முந்தைய தேதி முத்திரையுடன் கூடிய கடிதம் கட்டாயமாக அனுப்பப்பட வேண்டும். கடிதம் தமிழ், ஆங்கிலம், இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதப்பட வேண்டும். கடிதங்களை முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல் அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்.
நேரில் கொண்டு வரக்கூடாது
போட்டியானது 18 வயது வரை உள்ளவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என உள்நாட்டு தபால் அட்டை, தபால் உறை பிரிவுகளில் நடக்கிறது.
கடிதத்தின் அளவானது தபால் உறை பிரிவில் எழுதுவோர் ஏ4 அளவு வெள்ளைத்தாளில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
உள்நாட்டு தபால் அட்டை பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
அஞ்சலகங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகள், தேவையான அளவு அஞ்சல் தலை ஒட்டப்பட்டவை, இன்லாண்டு லட்டர் கார்டுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூரியர் மூலம் அனுப்பப்படும் தபால்கள், நேரில் கொண்டு வந்து கொடுக்கும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பரிசுத்தொகை
வெற்றி பெறும் கடிதங்களுக்கான பரிசுத்தொகையாக மாநில அளவிலான பரிசுகள் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கு பெறுவோர் கடிதத்தின் மேல் பகுதியில் 1.1.2022 அன்று என் வயது 18-க்கு மேல்/ 18-க்கு கீழ் என சான்று அளிக்கிறேன் என்ற வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு வயது சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரே பரிசுக்கு பரிந்துரை செய்யப்படும்.இந்த தகவலை நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.