திருவள்ளூரில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; வாலிபர் சுற்றிவளைப்பு - குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை


திருவள்ளூரில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; வாலிபர் சுற்றிவளைப்பு - குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
x

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த வாலிபரை சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்.

சென்னை

சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் ராஜா முகம்மது (வயது 26). இவர் கடந்த ஒரு ஆண்டாக திருவள்ளூர் லங்காகார தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்து காக்களூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசார் இவரை திருவள்ளூரில் உள்ள அவரது மாமனார் வீட்டில் திடீரென மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இவர், சவுதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், சிக்னல் என்ற செயலியில் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்ந்து பேசி வந்ததாகவும் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 18 மணி நேரம் அவரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது என்.ஐ.ஏ., ரா உளவுத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சட்ட விரோதமாக செயல்படும் சிக்னல் என்ற சமூக வலைத்தளத்தில் தேசவிரோதிகளுடன் பேசிய தாகவும், அதில் பேசிய நபர் ராஜா முகம்மதுவை சவுதிக்கு வரும்படியாகவும், அதற்கான பாஸ்போர்ட் ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறியதும் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜா முகம்மது, அவரது முகநூல் பக்கத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டதுடன், இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கூறி திருவள்ளூர் டவுன் போலீசார் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். பின்னர் குற்றவியல் நடுவர் நீதிபதி மூகாம்பிகை முன்னிலையில் ஆஜர்படுத்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story