விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி கோரி ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனைமலை,
ஆனைமலை அருகே மாரப்பன் கவுண்டன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சரளபதி பகுதியில் மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி அப்பன் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2001-ம் ஆண்டு 140 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அரசு வழங்கியது.
இதுவரை மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரை எடுத்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.