விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:16:39+05:30)

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் கவுதம புத்தர் இல்லத்தில் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருச்செந்தூர் தொகுதி தலித் மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகால கோரிக்கையான திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நாளை (வியாழக்கிழமை) குடியரசு தினத்தன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றாமல் தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வரும் திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆகிய தாலுகா பகுதிகளில் தலித் மக்கள் வசிக்கும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்றும், அதேபோல் நாளை காலை 10 மணிக்கு திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் அரசூர் ராஜ்குமார், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, திருச்செந்தூர் ஒன்றிய துணை அமைப்பாளர் ராம்குமார், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், திருச்செந்தூர் நகர பொருளாளர் சரன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிளை செயலாளர் ஞானகுமார் நன்றி கூறினார்.


Next Story