விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மசாவு


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மசாவு
x

பூட்டிய வீட்டுக்குள் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை எண்ணூர், சின்ன எர்ணாவூர் 4-வது தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 48). பெயிண்டரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவொற்றியூர் தொகுதி துணை செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவருடைய மனைவி தீபா (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தீபாவை விட்டு பிரிந்த தனசேகர் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். தீபா, தனது மகன் பிரவீனுடன் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். தனசேகர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தனசேகர் வீடு பூட்டியே கிடந்தது. நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதற்கிடையில் தனசேகருக்கு கடன் கொடுத்த 2 பேர் அவரது வீட்டுக்கு வந்தனர். வீடு பூட்டி கிடப்பதும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதையும் கண்ட அவர்கள், இதுபற்றி எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பூட்டிய வீட்டுக்குள் தனசேகர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. அவரது தலையில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது.

தனசேகர் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த தனசேகர் பலரிடம் கடன் வாங்கி குடித்து மதுபோதைக்கு அடிமையாகி உள்ளார். இதனால் பூட்டிய வீட்டுக்குள் குடிபோதையில் அவர் நாக்கு வறண்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story