விக்கிரவாண்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
விக்கிரவாண்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விக்கிரவாண்டி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட பகண்டை கிராமத்தை சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் முருகவேல் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் ஒன்றிய செயலாளா் வெற்றி வேந்தன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவதூறு பரப்பிய முருகவேலை கைது செய்யக்கோரி விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில் விழுப்புரம் வழுதாவூர் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தேடி வருகிறோம், விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்தனர். இதையேற்ற கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.