விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2022 6:45 PM GMT (Updated: 10 Dec 2022 6:46 PM GMT)

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வணிக அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட வணிகர் அணி துணை அமைப்பாளர்கள் வேதா.ஸ்டாலின், ஹென்றி ஜான்சன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின் அரசு, தினேஷ் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் கதிர்வளவன், இஸ்லாமிய ஐக்கிய பேரவை மாநில துணை செயலாளர் ரியாஸ் கான் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

டாக்டர் நியமிக்க வேண்டும்

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியை நவீனப்படுத்தி 24 மணி நேரமும் டாக்டர் நியமிக்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரமாக நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கழுமலை வாய்க்கால், புறவாய்க்கால், இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். சீர்காழி நகராட்சியில் உள்ள குடிசை வீடுகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் அமைத்து தர வேண்டும்.

கோஷங்கள் எழுப்பினர்

புளிச்சக்காடு பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும். சீர்காழி பகுதியில் கோவில் இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்.சீர்காழி நகர் பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சீர்காழி ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சிவா நன்றி கூறினார்.


Next Story