நூலகம் செல்வோரை முடக்கிவரும் தொழில்நுட்பம் மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்து விட்டதா? ஆசிரியர்கள், மாணவிகள் கருத்து
"என்னிடம் நீ தலை குனிந்து படித்தால், உன்னை தலை நிமிரச் செய்வேன்'', இதுதான் நூலகம் நமக்கு சொல்லும் அறிவுரை.
வாசிக்கும் பழக்கம்
புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன.
அற்புதம் நிறைந்த புத்தகங்களை நூலகங்கள் போய் வாசிக்கும் பழக்கம் சமீபகாலமாக அருகி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு தூபமிடுகிறது. இருப்பினும் வாசிப்பை நேசிப்பவர்கள், இன்றும் நூலகத்தை நோக்கி நடைபோட்டு, புத்தகங்களை தேடிதேடிப் படிக்கத்தான் செய்கின்றனர். புத்தக கண்காட்சிகளில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்கிறார்கள்.
நூலக வகுப்பு
குழந்தைப் பருவம் முதல் புத்தக வாசிப்புத் திறனை ஏற்படுத்த, பள்ளிக்கூட கல்வியில் இருந்தே ஊக்கப்படுத்தப்படுகிறது.
அதற்காக பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் 40 பாட வகுப்புகளில், புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்காக ஒரு பாடவகுப்பு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகுப்புகளில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல், தனிமனிதர்கள், சிந்தனைகளை தூண்டும் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க வைத்து, அதன் வாயிலாக வினாக்கள் கேட்டு விடையளிப்பது, கலந்துரையாடுவது போன்றவை நடத்தப்படுகின்றன. இதுதவிர போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களை உத்வேகப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு படிக்கிறார்களா? நூலகப் பாடவகுப்புகள் பள்ளிக்கூடங்களில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது இருக்கிறது.
பல பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கண்காட்சியாகவே இருக்கின்றன என்ற புகார்களும் வருகின்றன.
புத்தக வாசிப்பு அவசியம்
பள்ளிகளை போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதில் நேரத்தை செலவிடும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கியிருக்கும் யோசனைகள் வருமாறு:-
மின்னணு நூலகம்
தர்மபுரி அரசு கலை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன்:-
தர்மபுரி அரசு கலை கல்லூரியில் 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு இளங்கலையில் 22 துறைகளும், முதுகலையில் 14 துறைகளும், ஆராய்ச்சி படிப்பில் 14 துறைகளும் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள நூலகத்தில் 30 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. தினமும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாடப்புத்தகங்களுடன் நாளிதழ்கள், பொது அறிவு புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த கல்லூரியில் ரூ.40 லட்சம் மதிப்பில் மின்னணு நூலகம் (டிஜிட்டல் லைப்ரரி) அமைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான கணினிகளும் வந்துவிட்டன. மின்னணு நூலகத்திற்கான புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும். அந்த பணி முடிந்தால் மாணவ-மாணவிகள் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான புத்தகங்களை எளிதாக பெற முடியும். அதிக புத்தகங்கள் கொண்ட ஒரு கல்லூரியில் உள்ள நூலகத்தை பிற கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டால் மாணவ-மாணவிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
வாசிப்பு வட்டம்
சின்ன பள்ளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி:-
பள்ளிகளில் மாணவர்கள் பாட புத்தகங்களை தாண்டி பொது அறிவையும் வளர்த்து கொள்வதற்கு நூலகங்கள் பயன்படுகின்றன. மாணவர்கள் கவனம் இப்போது சமூக ஊடகங்கள் மீது அதிகமாக உள்ளது. இதை மடைமாற்றம் செய்ய புத்தக வாசிப்பு பழக்கத்தை பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள நூலகப் புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்க தொடர் முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம். எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கு வாசிப்பு வட்டம் ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை பிற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கி வருகிறோம். மாணவர்களிடம் வாசிக்கும் ஆர்வத்தை மேம்படுத்த முதலில் சிறிய கதை புத்தகங்களாக கொடுத்து அதை வாசித்து அதில் உள்ள கதைகளை மற்ற மாணவர்கள் மத்தியில் கூறுவதற்கு பயிற்சி அளித்து வருகிறோம். வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கும் போது சமூகமும் மேம்பாடு அடையும்.
சிந்தனை திறன் மேம்பாடு
மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மகேஷ்:-
எங்கள் பள்ளியில் செயல்படும் நூலகத்திற்கு மாணவர்கள் வாரம் இரு முறை சுழற்சி முறையில் சென்று அங்குள்ள புத்தகங்களை படிக்கிறார்கள். அதன் மூலம் மாணவர்களுடைய கற்றல் திறன் மற்றும் சிந்தனை திறன் மேம்பட்டு வருகிறது. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த புத்தகங்களை மாணவர்கள் வாசிக்கும்போது பல்வேறு துறை சார்ந்த அறிவை வளர்த்து கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள். பாடப்புத்தகம் மட்டுமின்றி பிற புத்தகங்களை படிக்கின்ற பழக்கத்தை மாணவர்களிடம் இளம் பருவத்தில் இருந்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம்.
ஒழுக்கம், நன்னெறி
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி அபிநயா:-
எங்கள் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு நேரம் கிடைக்கும் போது சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை படித்து வருகிறோம். டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களை இன்னும் அதிக அளவில் பள்ளி நூலகங்களில் இடம்பெற செய்தால் போட்டித் தேர்வுகள் தொடர்பான தெளிவை சிறு வயதிலேயே மாணவ-மாணவிகள் பெற முடியும். அதேபோல் பள்ளிகளில் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் மாணவ-மாணவிகளிடம் புத்தக வாசிப்பு பழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிறு வயது முதலே ஒழுக்கம், நன்னெறி ஆகியவற்றையும் கடைபிடிக்க ஏதுவாக இருக்கும்.
பிற கல்லூரி நூலகங்கள்
பாலக்கோடு அரசு கல்லூரி மாணவி பூவரசி:-
எங்கள் கல்லூரியில் துறை வாரியாக புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறோம். கல்லூரியில் படிக்கும் அனைத்து துறை மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் பொது நூலக வசதியை ஏற்படுத்தினால் மாணவ-மாணவிகளுக்கு உதவும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரிய கல்லூரிகளில் உள்ள அதிக புத்தகங்கள் கொண்ட நூலகங்களை பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டால் இன்னும் சிறப்பாக அமையும். இதன்மூலம் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மிகவும் பயனடைவார்கள்.
சவால்
பொதுநூலக இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இளம்பகவத்:-
புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை போட்டி மூலம் தேர்வு செய்து, அவர்களை தேசிய அளவில், சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறோம். அரசு புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு ஆர்வம் சற்று மேம்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்த பணியை திறம்பட கொண்டு செல்வது ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. டிஜிட்டல் மூலம் பார்ப்பது சுலபம். ஆனால் அதிலும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அரசின் வாசிப்பு இயக்கம் தொடர் நிகழ்வாக இருக்கும்.
மாணவர்கள் போகாத இடம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்:-
பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போகாத ஒரு இடமாக நூலகம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை சற்று மாறி இருக்கிறது. மாணவர்களுக்கு புத்தக வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், நூலகங்களில் தேவையான புத்தகங்களை வாங்கி வைக்கவும் கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் நூலகங்களில் புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன. நூலகங்களை நிர்வகிக்க நூலகர் என்ற பதவி கிடையாது. அதற்கென்று ஒரு ஆசிரியருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவர் கற்பித்தல் பணியோடு சேர்த்து இதை மேற்கொள்கிறார். எனவே இதற்கென்று தனியாக ஒருவரை நியமித்தால் புத்தக வாசிப்பு, மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எளிய நடையில் கதை புத்தகங்கள்
பள்ளி குழந்தைகள் எளிமையாக படிக்கும் வகையில், கதைகள் அடங்கிய புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த புத்தகங்களில் நிறையப் படங்கள், எளிய வார்த்தைகள் இடம்பெற்று இருக்கும் என்றும், 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் அதை பார்த்து, படித்து, கருத்துள்ள கதையை புரிந்து கொள்ளும்படியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளன என்றும் அவர்கள் கூறினர்.
குழந்தை எழுத்தாளர்கள், விருப்பமுள்ள ஆசிரியர்கள் இதில் அந்த கருத்துள்ள கதைகளை எழுதுவதற்கு ஏற்றவாறு ஏற்பாடு நடந்து வருகிறது. வாசிப்பு இயக்ககம் மூலம் இந்தப் புத்தகங்களை பிரபலப்படுத்தவும், அனைத்து பள்ளி நூலகங்களிலும் இந்த புத்தகங்களை இடம்பெறச் செய்யவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.