இடிந்து விழும் அபாயத்தில் நூலகக்கட்டிடம்


இடிந்து விழும் அபாயத்தில் நூலகக்கட்டிடம்
x

கணியூரில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள நூலகக்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்

போடிப்பட்டி

கணியூரில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள நூலகக்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசிக்கும் பழக்கம்

நல்ல புத்தகங்களை தேடித் தேடி வாசித்தது ஒரு காலம்.தற்போது வாசிக்கும் பழக்கத்தை விட்டு இளையதலை முறையினர் வெகு தூரம் விலகிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிராய்டு போன்களே உலகம் என்பது போன்ற செயல்பாடு சிறுவர் முதல் பெரியவர் வரை உருவாகியுள்ளது. இந்தநிலையில் வாசிப்பின் அவசியத்தை இளைய தலைமுறையினருக்கு உணர்த்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பள்ளி கல்வித்துறை மற்றும் நூலகத்துறையினர் ஆர்வம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

அதுமட்டுமல்லாமல் நூலகங்கள் அனைத்தும் இளைய தலைமுறையினரைக் கவரும் வண்ணம் மேம்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.ஆனால் பெரும்பாலான நூலகங்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல், பராமரிப்பின்றி பரிதாப நிலையிலேயே உள்ளது.அந்தவகையில் கணியூர் பகுதியில் உள்ள கிளை நூலகக் கட்டிடம் சேதமடைந்த நிலையில், ஆபத்தான முறையில் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது.கதவு, ஜன்னல்களில் மழை தடுப்பானாக அமைக்கப்பட்ட சிலாப்புகள் சேதமடைந்து உடைந்து விழுந்துள்ளது.இதனால் கம்பிகள் நீட்டிக் கொண்டு எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது.மேலும் ஒருசில சிலாப்புகள் எப்போது விழும் என்று தெரியாத நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது.

பராமரிப்பில் அலட்சியம்

நூலகத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்து கீழே விழுந்துள்ளது.இதனால் திறந்த நிலையில் உள்ள நூலக வளாகத்துக்குள் இரவு நேரத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே நூலகத்தை பராமரிக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலான புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நூலகத்தை மேம்படுத்த வேண்டும். கிராமப்புற மாணவர்களின் அறிவாதாரமாக உள்ள நூலகங்கள் பராமரிப்பில் அலட்சியம் காட்டக் கூடாது என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.வாசகர்கள் வருகை குறைவால் பராமரிப்பில் அலட்சியம் கட்டப்படுகிறதா? அல்லது பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதால் வாசகர் வருகை குறைகிறதா என்று பட்டிமன்றம் நடத்துவதை விட்டு, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.



Next Story